குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, சனாதன தர்மத்தை உதாசீனப்படுத்தும் அரசுகள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ளார். சனாதன மரபுகளைப் பின்பற்றும் மக்களை ஏமாற்றும் அரசாங்கம் இந்தியாவில் நீடிக்க முடியாது என்ற நம்பிக்கை தன்னிடம் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, சனாதன மரபுகளை மதிக்கும் மக்கள் நீண்ட காலமாக உரிய அங்கீகாரத்திற்காகக் காத்திருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார். அந்த மரபுகளுக்கும் ஆன்மிக அடையாளத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, அதன் அடிப்படையில் ஆட்சி நடத்தும் அரசு உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்ததாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.
இந்தப் பின்னணியில், சனாதன தர்மத்தைப் புறக்கணிக்கும் அரசுகள் இனி மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 370வது பிரிவை ரத்து செய்தது, முத்தலாக் முறையை ஒழித்தது, பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தது போன்ற முடிவுகள் இந்தியாவின் கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டவை என அவர் விளக்கினார்.
இந்திய சமூகத்தின் அடிப்படை மதிப்புகளான சனாதன தர்மத்தின் கோட்பாடுகளை பாதுகாப்பதே தற்போதைய அரசின் கடமை என்றும், அந்த மதிப்புகள் தான் நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை வலுப்படுத்தும் என்றும் அமித்ஷா தனது உரையில் வலியுறுத்தினார்.
