சென்னை: மாநில சுயாட்சியே சதிகளை முறியடிக்கும் ஒரே வழி என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வலியுறுத்தினார். மத்திய அரசு அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டசபையில் பேசிய முதல்வர், இந்தியாவின் மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டி வருகிறது என்றார். மாநில சுயாட்சி கொள்கை குறித்து அண்ணாதுரை முன்வைத்த நிலைப்பாட்டை நினைவுகூர்ந்தார். மத்திய-மாநில அரசு உறவை ஆய்வு செய்த குழுவின் அறிக்கையை சட்டசபையில் வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மத்திய அரசு அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்துள்ளதாகவும், மாநில அரசுகளுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மாநிலங்கள் சுயாட்சி பெற்ற அமைப்பாக இயங்க வேண்டும்; இந்த கொள்கையை அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
1969ல் கருணாநிதி அமைத்த ராஜமன்னார் குழுவை சுட்டிக்காட்டிய முதல்வர், அந்த அறிக்கை சட்டசபை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதை நினைவுபடுத்தினார். பின்னர் பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்த போதிலும் தெளிவான முடிவுகள் எடுக்கப்படவில்லை; ஏமாற்றம் தொடர்கிறது என்றார்.
வரிப் பகிர்வு குறைப்பு மற்றும் ஒத்திசைவு பட்டியலில் உள்ள அம்சங்களை மத்திய அரசு பட்டியலுக்கு மாற்றுவது மாநில சுயாட்சியை பாதிக்கிறது என அவர் தெரிவித்தார். மாநில சுயாட்சியை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பில் மாற்றம் தேவை என்றும் வலியுறுத்தினார்.
கூட்டாட்சி தத்துவத்தை அரசியல் சட்டத்தின் கோட்பாடாக மாற்ற வேண்டும். இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மாநிலங்கள் நெருக்கடியில் இருந்து மீள மாநில சுயாட்சியே தீர்வு என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
