சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், ‘ஏர்செல்–மேக்சிஸ்’ நிறுவனம் 3,565.91 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற அனுமதி கோரியபோது அதற்கு ஒப்புதல் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அனுமதி வழங்கும் அதிகாரம் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவுக்கே இருந்தது. ஆனால், அமைச்சரவை ஒப்புதல் பெறாமல் 2006 மார்ச் 20ஆம் தேதி சிதம்பரம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வெளிநாட்டு முதலீட்டுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டதற்காக, சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு சொந்தமான நிறுவனம் மூலம் 1.16 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த தொகை தொடர்பாக கார்த்தி மற்றும் சிதம்பரம் இடையே பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததா என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகளும் தனியாக விசாரித்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிதம்பரத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான ஆவணத்தை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும் டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
