சட்டவிரோத கனிமக் கடத்தலில் திமுக அமைச்சர்களுக்கு நேரடி தொடர்பு: அண்ணாமலை
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத கனிம வள கொள்ளைகளுக்கு முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் இருவருமே துணை நிற்கின்றனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியைச் சேர்ந்த சு. சந்திரசேகர், திமுகவின் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளராக இருந்து வந்தவர். தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் பெருமளவில் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டி, தனது கட்சிப் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனை மேற்கோள் காட்டி அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்,
“தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் கட்டுக்கடங்காத சட்டவிரோத கனிமக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் திமுக அரசு வேண்டுமென்றே செயலற்ற நிலையில் உள்ளது. இதனை எதிர்த்து ஒரு திமுக நிர்வாகியே கட்சியிலிருந்து விலகியிருப்பது, நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது,” என தெரிவித்துள்ளார்.
மேலும்,
“இந்த பிரச்னையை பலமுறை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டவிரோத சுரங்கத் தோண்டல் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இருந்தும், ஊழல் நிறைந்த திமுக அரசின் முன்னுரிமைப் பட்டியலில் இது இடம் பெறவில்லை,” என்று சாடியுள்ளார்.
அண்ணாமலை தொடர்ந்து,
“இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் இருவருமே துணை நிற்கின்றனர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் மாநில எல்லைகளை கடந்து சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்துச் செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புகளையும், இயற்கை வளங்களின் மீளமுடியாத அழிவையும் சந்தித்து வருகின்றனர்,” என குற்றம்சாட்டினார்.
இறுதியாக,
“உண்மையான பிரச்னைக்கு தீர்வு காணாமல், அந்தப் பிரச்னையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்களை களங்கப்படுத்துவதிலேயே திமுக தனது கவனத்தை செலுத்தும்,” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
