கோல்கட்டா: வரும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அரசு அழிந்து போவது உறுதி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள பாரக்பூரில் நடைபெற்ற பாஜ கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் மாநில மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என கூறினார். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது என்றும், எல்லைப் பாதுகாப்பை பலவீனப்படுத்தியுள்ளது என்றும், ஊழலை வேரூன்றச் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். வரும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அரசு அழிந்து போவது உறுதி என அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து நடைபெறும் ஊடுருவல், முழு நாட்டிற்கும் ஒரு பாதுகாப்புப் பிரச்னையாக மாறியுள்ளதாக அமித்ஷா கூறினார். நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதும், ஊடுருவல்காரர்கள் தங்களின் வாக்கு வங்கி என்பதால், எல்லை வேலி அமைப்பதற்காக எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு திரிணமுல் காங்கிரஸ் அரசு நிலம் வழங்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
சட்டவிரோத குடியேறிகளை மாநில நிர்வாகமும், போலீசாரும் தடுக்கவில்லை என்றும், மாறாக போலி ஆவணங்களை பயன்படுத்தி அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாகவும் அமித்ஷா தெரிவித்தார். கோல்கட்டா அருகே ஆனந்தபூரில் உள்ள தொழிற்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு விபத்து அல்ல என்றும், அது மம்தா பானர்ஜி அரசின் ஊழல் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் ஏன் காவலில் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேற்கு வங்கத்தில் நிர்வாகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுவா மற்றும் நாமசூத்ரா சமூகங்களை திரிணமுல் காங்கிரஸ் மிரட்டுவதாகவும் கூறினார். அதே நேரத்தில் அவர்கள் பயப்பட ஒன்றுமில்லை என்றும், ஊழல் கறைபடிந்த அமைச்சர்களுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட மறுப்பதன் மூலம், தன்னுடைய உறுதிப்பாட்டை மம்தா பானர்ஜி நிரூபிக்க வேண்டும் என்றும் அமித்ஷா வலியுறுத்தினார்.
பாஜ 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், திரிணமுல் காங்கிரஸ் அரசை வேரோடு பிடுங்கி, அதற்கு பதிலாக தேசபக்தர்கள் மற்றும் தேசியவாதிகளின் அரசு அமையும் என்றும் அமித்ஷா கூறினார்.
