கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நான்கு மாதங்களில் விசாரணை முடிவடைந்து இன்று (மார்ச் 07) தீர்ப்பு வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்து, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தார்.
கோவை பீளமேடு ஏர்போர்ட் பின்புறம் உள்ள பிருந்தாவன்நகர் பகுதியில் கடந்த நவம்பர் 2ம் தேதி இரவு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி, பலாத்காரத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியை சேர்ந்த சதீஷ் (30), அவரது சகோதரர் கார்த்திக் (21), மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா (20) ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் மீது டிசம்பர் 3ம் தேதி முதல் கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கு டிசம்பர் 19ம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
ஜனவரி 9ம் தேதி 220 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 29ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, பிப்ரவரி 2ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது.
பிப்ரவரி 23ம் தேதி சாட்சி விசாரணை நிறைவு பெற்றது. பிப்ரவரி 24ம் தேதி அரசு தரப்பு வக்கீல் ஜிஷா இறுதி வாதத்தை முன்வைத்தார். எதிர் தரப்பில் இலவச சட்ட உதவி மைய வக்கீல்கள் வாதிட்டனர்.
இரு தரப்பின் வாதங்களும் முடிந்ததைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுந்தரராஜ் அறிவித்தார். அதன்படி மதியம் 3 மணி அளவில் தண்டனை விவரங்களை அவர் வெளியிட்டார்.
குற்றவாளிகள் 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி சுந்தரராஜ் அறிவித்தார்.
கோவை மாணவி பாலியல் வழக்கின் தீர்ப்பு குறித்து அரசு வக்கீல் ஜிஷா பேட்டி:
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனையை நீதிபதி விதித்துள்ளார். விசாரணை அதிகாரிகளின் செயல்பாட்டை நீதிபதி பாராட்டினார்.
மொத்தம் 72 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவியின் ஆண் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் நடந்த நாளில் குற்றவாளிகள் முதலில் மாணவியுடன் இருந்த நபரை தாக்கியுள்ளனர். பின்னர் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
டிஎன்ஏ பரிசோதனை, மாணவியின் நண்பரை வெட்டிய இடத்தில் கிடைத்த தடயங்கள், கைரேகை விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் குறித்து பலவிதமான தகவல்கள் ஊடகங்களில் வெளியானதாகவும், அவை அனைத்தும் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும், அவர்களின் செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்ததாக கூறப்பட்டது.
குற்றவாளிகள் 3 பேர்மீதும் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள் என்றும் வக்கீல் ஜிஷா தெரிவித்தார்.
