கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மணிக்கம்பாளையத்தில், சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்த வங்கதேச நாட்டவர்கள் 11 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். முறையான அனுமதியின்றி வெளிநாட்டினர் தங்கி வேலை செய்து வருவது குறித்து கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அகஸ்டியன் நிட்வேர் என்ற தனியார் நிறுவனத்தில் சில வங்கதேசத்தினர் பணிபுரிவதாக கிடைத்த தகவலின் பேரில், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் அன்னூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையில் போலீசார் நள்ளிரவில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேர் இந்தியாவில் தங்கி வேலை செய்ய எந்தவித சட்டப்பூர்வ ஆவணங்களும் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தில் தலா ரூ.7,000 செலுத்தி, மனிதக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இங்கு வேலை வாங்கித் தருவதாக கூறும் புரோக்கர்களுக்கு கமிஷன் வழங்கி, திருப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாகவும், கடந்த ஒரு மாதமாக அன்னூர் பகுதியில் உள்ள இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் கூறினர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 11 பேரையும் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தற்காலிக முகாமிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த கைது நடவடிக்கை குறித்து சென்னையில் உள்ள வெளிநாட்டினருக்கான மண்டல பதிவாளர் அலுவலகத்துக்கும், அதன் மூலம் வங்கதேச தூதரகத்துக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக அன்னூர் போலீசார் தெரிவித்தனர்.
