சென்னை: கோவில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் கருதாமல், திருவிழாக்களில் சிறு வியாபாரிகளுக்கும் உள்நாட்டு பொருட்கள் விற்பனைக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சேலம் பகுதியில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா வரும் மார்ச் 11 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் தற்காலிக கடைகளை முறைப்படுத்த கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டிபரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பணிக்காக போதுமான போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அறநிலையத் துறை தரப்பில், தற்காலிக கடைகள் அமைப்பதற்கான டெண்டரில் ஒருவர் மட்டுமே பங்கேற்றதால், மீண்டும் டெண்டர் கோரப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி கூறியதாவது: கோவில் திருவிழா என்பது சடங்கு மட்டுமல்ல; அது ஒரு கலாசார நிகழ்வு. திருவிழாக்களில் சிறு வியாபாரிகள் உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதிக விலைக்கு டெண்டர் கோரும் நடைமுறைகள் சாதாரண வியாபாரிகளை பாதிக்கும்.
எனவே, அதிக கட்டணங்களை குறிப்பிடாமல், சிறு வியாபாரிகள் பங்கேற்கும் வகையில் டெண்டர் நடைமுறை அமைய வேண்டும். இல்லையெனில், கோவில் தன் கலாசார மதிப்பை இழக்கும்.
மேலும், திருவிழாக்களில் சிறு வியாபாரிகள், பெண்கள், பழங்குடியின சமூகத்தினரை ஹிந்து அறநிலையத் துறை ஊக்குவிக்க வேண்டும்.
அத்துடன், கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசி திருவிழாவிற்கான குடிநீர் மற்றும் போதுமான கழிப்பறை வசதிகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
