சென்னை: கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 3.63 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி, ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் நேரில் ஆஜராகி, ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார்.
விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், தமிழக கோவில்களுக்கு பெரும் அளவில் நிலங்கள் உள்ளன; அவற்றை பாதுகாப்பது அறநிலையத்துறை அதிகாரிகளின் முக்கிய பொறுப்பு என குறிப்பிட்டனர். அதிகாரிகளின் அலட்சிய போக்கே கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்புக்கு காரணமாகிறது என கடுமையாக சுட்டிக்காட்டினர்.
மேலும், கோவில் சொத்துக்களை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோவிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருந்தால், அந்த இழப்பீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சமூக சேவையின் ஒரு பகுதியாக, தங்களைத் தாங்களே கவனித்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முதியோருக்கு, தரமான உணவு வழங்கும் திட்டங்களை அறநிலையத்துறை பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
