சென்னை:
ஹிந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஹிந்துக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், திருப்பரங்குன்றம் பாரம்பரிய தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அதை அரசு மற்றும் அதிகாரிகள் அமல்படுத்தாததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டத்தின் போது தன் உயிரை தியாகம் செய்த பூர்ணச்சந்திரன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கிறிஸ்துவ ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, மதச்சார்பு வழிபாட்டு கட்டடங்களுக்கு கலெக்டரின் தடையில்லா சான்று தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளதை திரும்ப பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வரும் சட்டசபை தேர்தலில், ஹிந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக தேர்தல் அறிக்கை வெளியிடும் அரசியல் கட்சிகளுக்கு ஹிந்துக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மக்கள் மத்தியில் ஒரு வெகுஜன இயக்கமாக எடுத்துச் சென்று, தி.மு.க. ஆட்சியை அகற்றும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும், பசு வதைத் தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதுடன், பல்வேறு முக்கிய தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
