காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவராஜ சுவாமி கோவிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992 முதல் வழங்கப்பட்டு வந்த ‘பஞ்ச முத்திரை மரியாதை’ நிறுத்தப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஹிந்து அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகினார்.
அப்போது அவர், தேவராஜ சுவாமி கோவில் செயல் அறங்காவலர் 1991-ஆம் ஆண்டு செப்டம்பர் 05-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல், காஞ்சி காமகோடி பீடம் – சங்கர மடம், அகோபில மடம், நாங்குநேரி வானமாமலை மடம், மைசூர் பரகால ஜீயர் மடம் மற்றும் உடுப்பி வியாசராயர் மடம் ஆகிய ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே பல ஆண்டுகளாக சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் அமர்வு, கோவிலில் முதல் மரியாதை என்பது எப்போதும் தெய்வத்துக்கே உரியது என்றும், சிறப்பு மரியாதைகளை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது என்றும் உத்தரவிட்டது.
மேலும், மடங்களின் தலைவர்களை கௌரவிப்பது மற்றும் அவர்களுக்கு மரியாதை வழங்குவது குறித்து, ஹிந்து அறநிலையத் துறை சட்டத்தின் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளே முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அத்துடன், இதுதொடர்பாக உரிய நிவாரணம் கோர, மனுதாரர் தரப்பு அறநிலையத் துறை அதிகாரியை அணுகலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
