கோரிக்கைகளுக்காக போராடிய நர்ஸ்களை கைது செய்வதா? இபிஎஸ் கண்டனம்
சென்னை:
மீண்டும் பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நர்ஸ்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலின்போது திமுக அரசு நர்ஸ்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 356-ஐ நிறைவேற்ற வேண்டும் என்றும், கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து நர்ஸ்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, நர்ஸ்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று தமிழக நர்ஸ்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றதாக கூறியுள்ளார். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான நர்ஸ்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், போராட்டத்தில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்ட நர்ஸ்களை போலீசார் கைது செய்து, பஸ்களில் அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டதாகவும், அங்கு அவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் எனக் கூறி, திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை அவர்களை மீண்டும் கைது செய்து, அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராடி வரும் நர்ஸ்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்துவதாகவும் இபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
