மதுரை: கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் முழு விவரங்களையும் அறநிலையத்துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் காதப்பாறை பகுதியில் உள்ள ஒரு கல்வி அறக்கட்டளை பள்ளியை நடத்தி வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சர்வே எண்ணில் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கோயில் நிலத்தை பள்ளிக்கான விளையாட்டு மைதானமாகவும், அறக்கட்டளைக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலத்தை ஒருவரின் சட்டபூர்வ வாரிசுகளிடமிருந்து உள்குத்தகையாக அறக்கட்டளை நிர்வாகம் பெற்றிருந்தது. பின்னர் அந்த நிலத்தின் குத்தகைத் தொகையை உயர்த்தி அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து, முன் அறிவிப்பு வழங்காமல் குத்தகைத் தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறி அந்த உத்தரவை ரத்து செய்ய கோரி அறக்கட்டளை நிர்வாகம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அறநிலையத்துறை சட்டத்தின் படி கமிஷனரின் அனுமதியின்றி கோயில் நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விட முடியாது என்றும், அதற்கு அரசின் முன் அனுமதியும் அவசியம் என்றும் குறிப்பிட்டார். ஆனால் இந்த வழக்கில் மனுதாரர் எந்த அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு உள்குத்தகை பெற்றுள்ளதாகவும், இதனால் அந்த குத்தகை ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்றும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனை எதிர்த்து அறக்கட்டளை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் பி. புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சுப்பாராஜ், கோயில் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் மற்றும் வழக்கறிஞர் ஆதிமூலபாண்டியன் ஆஜராகினர்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், மனுதாரர் பயன்படுத்தி வரும் நிலம் ஒரு மத நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், அந்த நிலம் தொடர்பாக அவருக்கு எந்த சட்டபூர்வமான குத்தகை உரிமையும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டது. எனவே அந்த நிலத்தை அவர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக கூறி மேல்முறையீட்டு மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதே நேரத்தில், கோயில் சொத்துகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் சில முக்கிய வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அதன்படி, கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் பரப்பளவு, குத்தகை காலம், குத்தகைதாரர்கள் மற்றும் குத்தகைத் தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறநிலையத்துறை தனது இணையதளத்தில் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் கோயில் சொத்துகளை குத்தகைக்கு விடும்போது சட்டம் மற்றும் விதிகளை அறநிலையத்துறை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், கமிஷனரின் அனுமதியின்றி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எந்த குத்தகையும் வழங்கப்படக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அத்துடன் மத நிறுவனங்களின் அசையா சொத்துகள் அனைத்தும் பொதுஏலம் மூலம் மட்டுமே குத்தகைக்கு விடப்பட வேண்டும் என்றும், அதன்மூலம் அந்த சொத்துகளுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் மனுதாரர் பயன்படுத்தி வரும் கோயில் நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
