கூட்டுறவுத் துறையில் பணிநியமன நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கையில் கூறப்பட்டதாவது: மாநில மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் சார்பாக கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கூட்டுறவு தேர்வுகளின் இறுதி பட்டியல், 100 நாட்கள் கடந்தும் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வெழுதிய இளைஞர்கள் கீழ்ப்பாக்கம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநில அளவிலான தேர்வில் 327 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் 267 ஆக குறைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மாவட்ட அளவிலான 2314 பணியிடங்களுக்கு பல ஆயிரம் இளைஞர்கள் தேர்வெழுதி முடிவுக்காக காத்திருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
இன்று நடைபெறும் போராட்டம் வெறும் கோரிக்கை அல்ல; பல குடும்பங்களின் எதிர்பார்ப்பையும் எதிர்காலத்தையும் பிரதிபலிக்கிறது. தகுதியான இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, இறுதி தேர்வு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
