சென்னை:
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை காப்பாற்றுவதற்காகவே திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மேச்சேரி பஸ் நிலையம் அருகே திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், “நான் அமைச்சர் ஆள், ஆட்சி எங்களுடையது” என கூறி போலீஸ் அதிகாரிகளை மிரட்டுவதால், மேச்சேரி காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக நிர்வாகிகள் சட்டத்தையும் காவல் துறையையும் அச்சுறுத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதாக கூறிய அண்ணாமலை, திமுக ஆட்சியில் சட்டம், கட்சியினரின் முறைகேடான செயல்பாடுகளுக்கு துணை நிற்கும் நிலை உருவாகியுள்ளதாக விமர்சித்துள்ளார். திமுகவில் இருப்பவர்கள் எந்த குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படாது என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது அதிகார துஷ்பிரயோகத்தின் இன்னொரு எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகவே திமுக அரசு செயல்பட்டு வருவதாக கூறிய அண்ணாமலை, சேலம் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் உடனடியாக இந்த சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சட்டமும் காவல் துறையும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவே என்றும், ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளுக்கு துணை நிற்பதற்கல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
