கிரீன்லாந்து மிரட்டலை நிறுத்துங்கள்: டிரம்ப்புக்கு டென்மார்க் பிரதமர் கடும் பதிலடி
வாஷிங்டன்: கிரீன்லாந்தை கைப்பற்றும் வகையிலான மிரட்டல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாக நிறுத்த வேண்டும் என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்கா ராணுவ நடவடிக்கையின் மூலம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து நாடு கடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, டிரம்புக்கு நெருக்கமான ஸ்டீபன் மில்லரின் மனைவி காதே மில்லர் சமூக ஊடகத்தில் அமெரிக்க கொடியுடன் கூடிய கிரீன்லாந்து வரைபடத்தை வெளியிட்டு, “அடுத்து விரைவில்” என பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
டென்மார்க் பிரதமர் திட்டவட்ட அறிக்கை
இதுகுறித்து மெட்டே பிரெடெரிக்சன் வெளியிட்ட அறிக்கையில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இணைந்து நேட்டோவில் உறுப்புநாடுகளாக உள்ளதாகவும், பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரலாற்று ரீதியாக நெருக்கமான நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா, தங்களை விலைபேச முடியாது என்று தெளிவாக கூறியுள்ள ஒரு நாடு மற்றும் அதன் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கிரீன்லாந்து விவகாரம்
கிரீன்லாந்து தற்போது டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, அந்த தீவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கு டென்மார்க் திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளது. இருந்தபோதும், அமெரிக்கா தொடர்ந்து அந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறது.
டிரம்பின் பதில்
டென்மார்க் பிரதமரின் பேட்டிக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு டிரம்ப் கூறுகையில், தேசிய பாதுகாப்பு நோக்கில் கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு தேவைப்படுவதாகவும், ஆனால் டென்மார்க்கால் அதனை வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
