சென்னை: காலாவதியான மது விற்பதால் பாதிக்கப்படுவது முதல்வர் குடும்பமோ அல்லது தி.மு.க., அமைச்சர்கள் குடும்பமோ அல்ல; அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவையில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு தி.மு.க., அரசு வைத்திருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் உயிர் மற்றும் உடல்நலம் குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கில் செயல்படும் தி.மு.க., அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மது விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தி.மு.க., அரசு, குறைந்தபட்சமாக விற்பனை செய்யப்படும் மதுவின் தரத்தையாவது பாதுகாக்கத் தவறுவது திட்டமிட்ட குற்றம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். காலாவதியான மது விற்பதால் பாதிக்கப்படுவது முதல்வர் மு.க. ஸ்டாலின் குடும்பமோ அல்லது தி.மு.க., அமைச்சர்கள் குடும்பமோ அல்ல; அப்பாவி பொதுமக்களும் அவர்களது குடும்பங்களுமே பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதல்வருக்கு அருவருப்பாக இல்லையா எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
