சென்னை: ஜாதி அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாத கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக சார்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் போஸ்டர்கள் பலரிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நெருக்கமானவராக இருந்தவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட அவருக்கு விஜயகாந்த் வாய்ப்பு வழங்கினார். ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
தேமுதிகவில் அவர் வளர்வதை விரும்பாத சிலர் அவரை ஓரம்கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் அவர் பின்னர் திமுகவில் இணைந்தார். தற்போது திமுக நடத்தும் ஆங்கில நாளேட்டின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகிறார்.
இதையடுத்து “ராஜ்யசபாவில் மீனவர் குரல். எங்களது நீண்டகால கோரிக்கையை ஏற்று மீனவ சமூகத்தை சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு எம்.பி வாய்ப்பு வழங்கிய திமுகவிற்கும் முதல்வருக்கும் நன்றி” எனும் வாசகங்களுடன் தமிழகம் முழுவதும் மீனவர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைமையின் ரகசிய உத்தரவின் பேரிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவதாவது: கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர். இதுவரை அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் அவருக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டதுடன், அவரது சமூக அடையாளத்தை குறிப்பிட்டு விளம்பரம் செய்யப்பட்டிருப்பது பல தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கிறிஸ்துவ மீனவர் சமூகத்தின் வாக்குகள் விஜய்க்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக சில ஆய்வுகள் கூறுவதால், அதனை மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
