சென்னை: ஓட்டுகளை விலை கொடுத்து வாங்கும் நடைமுறை நடைபெற்று வருகிறது. காசு கொடுத்து பெறும் வெற்றி என்பது இழிவானது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், கேரளாவில் இருந்து நமது எல்லையை காக்க நாம் போராடி வருகிறோம் என்றார். நமது மலைகளை வெட்டி எடுத்து செல்கின்றனர் என்றும், அங்கிருந்து கொண்டு வரும் குப்பைகளை இங்கு கொட்டுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். எல்லைப் பகுதிகளில் நாம் பல இழப்புகளை சந்தித்து வருகிறோம் என்றும், அதனை சரி செய்ய தான் நான் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இழிவானது
ஓட்டுக்களை விலை கொடுத்து வாங்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது. காசு கொடுத்து பெறப்படும் வெற்றி என்பது இழிவானது என்று அவர் கூறினார். ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு பணநாயகம் உருவாகி விட்டதாகவும் அவர் விமர்சித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறதா என்ற கேள்வி எழும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு அரசு அல்லது நாடு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை இருந்தால், மக்களின் நலனில் அக்கறை காட்ட முடியாது என்றார். சட்டம் ஒழுங்கு என்பது அடிப்படை அம்சம் என்றும், அதையே சரியாக செயல்படுத்த முடியாத நிலையில் மக்கள் நலனில் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். சாதாரணமாக கொலை செய்து விடலாம் என்ற சூழல் உருவாகி விட்டதாகவும் அவர் கூறினார்.
நல்ல ஆட்சி
இங்கு கொலைக்கு அதிகபட்ச தண்டனை 90 நாட்கள் தான் எனவும் அவர் குறிப்பிட்டார். உரிய சான்றுகள் இல்லாததால் குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர் என்றும் கூறினார். சட்டங்கள் இருந்தாலும் அவை நடைமுறையில் செயல்படவில்லை என்பதால் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றார்.
நல்ல ஆட்சி என்பது சொல்லில் மட்டும் உள்ளது, செயல்பாட்டில் இல்லை என்றும் அவர் விமர்சித்தார். மாநில உரிமைகளை பறிகொடுத்தவர்களே தற்போது மாநில உரிமை பற்றி பேசுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் சினிமா ஒரு மதம் போல ஆகி விட்டது என்றும், அரசு விழாக்களில் திரைத்துறையினர் ஏன் கலந்து கொள்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
