காசி தமிழ்ச் சங்கம அனுபவம் இதயத்தை தொட்டது: நாமக்கல் இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
புதுடில்லி: காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட இளைஞர் பிரகாஷ் பழனிவேல் தெரிவித்த நேர்மையான கருத்துகள் தம் இதயத்தை தொட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காவது பதிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்ட நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர் பிரகாஷ் பழனிவேலும் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பெற்ற அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை அவர் பிரதமர் மோடிக்கு கடிதமாக எழுதி அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, பிரகாஷ் பழனிவேலின் அனுபவங்கள் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் எழுதிய கவிதை நெஞ்சை நெகிழ வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தின் செழுமையான கலாசாரமும், அதன் வரலாற்றுத் தொடர்புகளும் காசி தமிழ்ச் சங்கமம் மூலம் அழகாக கொண்டாடப்படுவதாகவும், இத்தகைய முயற்சிகள் மூலம் பிரகாஷ் பழனிவேல் போன்ற மாணவர்கள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை வலுப்படுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மற்ற இளைஞர்களுக்கும் ஊக்கமளித்து, நாட்டின் ஒற்றுமையை மேலும் உறுதிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இறுதியாக, மாணவர் பிரகாஷ் பழனிவேலுக்கு தனது வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பிரதமரின் பாராட்டுக் கடிதம் தன்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்ததாக கூறிய பிரகாஷ் பழனிவேல், இத்தகைய அங்கீகாரம் கிடைக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்றும், இந்த செய்தி தனது குடும்பத்தினருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
