கவர்னரை விமர்சிப்பது முறையல்ல – எடப்பாடி பழனிசாமி
சென்னையில் நடைபெற்ற சட்டசபை நிகழ்வுகளுக்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ரவியை விமர்சிப்பது முறையல்ல என தெரிவித்துள்ளார்.
சட்டம் – ஒழுங்கு பாதிப்பு குறித்து அதிமுக மற்றும் பாஜ எம்எல்ஏக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கவர்னர் உரையில் இடம்பெற்ற கருத்துகள் குறித்து விளக்கம் அளித்தார்.
தமிழகம் இந்தியாவின் “தற்கொலை தலைநகராக” மாறி வருவதாக கவர்னர் குறிப்பிட்டுள்ளதாக கூறிய அவர், அமைச்சரவை தயாரித்து வழங்கிய உரையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதில் கவர்னருக்கு உரிமை உள்ளது என்றார். அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் – ஒழுங்கு முறையாக பேணப்பட்டதாகவும், சட்டத்தின் ஆட்சி நிலவியதாகவும் தெரிவித்தார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டினார். கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் நாள்தோறும் நடைபெறுவதாகவும், ஊடகங்களில் தொடர்ந்து குற்றச் செய்திகள் மட்டுமே வெளியாகி வருவதாகவும் கூறினார்.
தமிழகம் போதைப்பொருள் புழக்கம் அதிகமான மாநிலமாக மாறி விட்டதாக கூறிய அவர், இதை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளதாக விமர்சித்தார்.
இதுபோன்ற நிலைக்கு காரணமான திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியே வெளிநடப்பு செய்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கவர்னர் வெளியிட்டுள்ள கருத்துகள் உண்மையை அடிப்படையாக கொண்டவை என்றும், உரையில் தவறான தகவல்களை திணிக்க முயற்சி செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
“நான் வாசிக்கும் போது தவறானதை சரி என்று வாசிக்க மாட்டேன்” என கவர்னர் ரவி கூறியது தான் இப்பிரச்னையின் அடிப்படை என கூறிய அவர், கவர்னரை விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும், அதிமுக இதுபோன்ற விமர்சனங்களில் ஈடுபட்டதில்லை என்றும் தெரிவித்தார்.
