சென்னை: தி.மு.க.,வினர் பணம் சம்பாதிப்பதற்காகவே தமிழகத்தில் வினோதமான கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற 2021–22 கல்வியாண்டிலிருந்து தற்போது வரை, பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. தொடக்கப் பள்ளி வகுப்புகளில் இது பூஜ்ஜியத்திலிருந்து 2.70 சதவீதமாகவும், நடுநிலைப் பள்ளிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 2.80 சதவீதமாகவும், உயர் நிலை வகுப்புகளில் 4.47 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
தனியார் பள்ளிகள் நடத்தும் தி.மு.க.,வினர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, அரசு பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல், அதன் கட்டமைப்பை முற்றிலும் சிதைத்ததே இதற்கான முக்கிய காரணம்.
உலகத் தரம் வாய்ந்த கல்வியை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து, கட்சிக்காரர்கள் லாபம் பெறுவதற்காக தி.மு.க., அரசு கொண்டு வந்த இந்த வினோத கல்விக் கொள்கை, ஒரு தோல்வியடைந்த கல்விக் கொள்கை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
ஏழை குழந்தைகளின் எதிர்காலத்தை சிறிதும் கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக மாற்றி, நடுத்தர குடும்பத்தினர்மீது பெரும் கடன் சுமையை தி.மு.க., அரசு திணித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
