புதுடில்லி: டில்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். 51 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதிய யுஜிசி விதிகளை அமல்படுத்த வேண்டும், ரோகித் வெமுலா சட்டம் கொண்டு வர வேண்டும், துணைவேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜேஎன்யு மாணவர்கள் பேரணி நடத்த முயன்றனர்.
பேரணியில் ஈடுபட்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு கொண்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
போலீசார் பேரணியை தடுத்து நிறுத்திய போது, மாணவர்கள் தடுப்புகளை சேதப்படுத்தியதாகவும், கற்கள், காலணிகள் மற்றும் கொடிக் கம்புகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிலர் போலீசாரை கடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து, ஜேஎன்யு மாணவர் சங்க நிர்வாகிகள் நால்வர் உட்பட 51 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் ஜேஎன்யு மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க பல்கலைக்கழக வளாகத்தில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக பிப்ரவரி தொடக்கத்தில் அம்பேத்கர் நூலகத்தில் இருந்த கண்காணிப்பு சாதனங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில், கம்யூனிஸ்ட் ஆதரவு மாணவர் சங்க நிர்வாகிகள் ஐந்து பேர் நீக்கப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
