சென்னை: தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்ற மாற்றுத்திறனாளி தடகள பயிற்சியாளர் தீபா, பணி நிரந்தரம் கோரி தலைமை செயலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுரை மாவட்டம் எல்லீஸ் நகரைச் சேர்ந்த தீபா, மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகளில் மூன்று வெள்ளி உள்ளிட்ட ஆறு பதக்கங்கள் வென்றுள்ளார். அவரது சாதனைகளை பாராட்டி, கடந்த 2010ஆம் ஆண்டு தமிழக அரசின் வீரமங்கை ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்பட்டது. அப்போது, அரசு பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் பகுதி நேர தடகள பயிற்சியாளர் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால், பணி நிரந்தரம் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த தீபா, நேற்று தலைமை செயலக வளாகத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
சட்டசபை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் போராட்டம் நடந்ததால், போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
