இம்பால்: மணிப்பூர் மாநில பா.ஜ., எம்எல்ஏக்கள் குழு தலைவராக யம்நம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் விரைவில் மணிப்பூர் மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கிடையே, 2023 மே மாதம் முதல் மோதல் வெடித்து, அது பெரும் கலவரமாக மாறியது. இந்த கலவரங்களில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பைரேன் சிங் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்போது, மாநிலத்தில் பதற்றம் குறைந்து, மெல்ல அமைதி திரும்பி வருகிறது.
இந்தச் சூழலில் நடைபெற்ற பா.ஜ., எம்எல்ஏக்கள் குழு கூட்டத்தில், யம்நம் கெம்சந்த் சிங் ஒருமனதாக குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அவர் விரைவில் மணிப்பூர் மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார்.
