கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி: கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் உணர்வுகளை பாதிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
தாய்லாந்து – கம்போடியா இடையே நீடித்து வரும் எல்லைத் தகராறு காரணமாக, கம்போடியா கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 29 அடி உயர விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவத்தினர் இடித்து அகற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், தற்போதைய எல்லைப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பகுதியில் சமீபத்தில் நிறுவப்பட்ட ஹிந்து மத தெய்வச் சிலை சேதப்படுத்தப்பட்டதாக வந்த செய்திகளை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை, அப்பகுதியின் நாகரிக மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகவும், அங்குள்ள மக்கள் ஆழ்ந்த பக்தியுடன் போற்றி வணங்கும் ஒன்றாகவும் இருப்பதாக அவர் கூறினார்.
பிரதேச உரிமை தொடர்பான முரண்பாடுகள் இருந்தாலும், இத்தகைய அவமரியாதைச் செயல்கள் உலகளாவிய அளவில் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும், இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்பி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், உயிரிழப்புகள், சொத்து சேதங்கள் மற்றும் பாரம்பரியச் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
