சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம் வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து, வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை பெரிய அளவில் நடத்த பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீப நாளன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது. ஆனால், அரசு மற்றும் காவல் துறை அனுமதி மறுத்ததாக பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திர தினத்தில், வீடுகளில் முருகன் படத்தை வைத்து விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, மாநிலம் முழுவதும் வீடுகள் மட்டுமன்றி பல கோவில்களிலும் ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாராயண நிகழ்ச்சிகளை நடத்தினர்.
ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும். மத நிகழ்வுகளில் தடைகள் இருக்கக் கூடாது,” என்றனர்.
இந்நிலையில், வரும் மார்ச் 2ஆம் தேதி பவுர்ணமியன்று திருப்பரங்குன்றம் மலையில் கிரிவலம் வருமாறு ஹிந்து அமைப்புகளும் பா.ஜ.வும் அழைப்பு விடுத்துள்ளன. இந்த கிரிவலத்திற்கு குறைந்தது ஒரு லட்சம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
