கண்ணூர்: கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது கண்ணூர் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவ சேவைகளில் அலட்சியம் உள்ளதாக குற்றம்சாட்டி, இரிக்கூர், பைய்யாவூர், தலசேரி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திருவனந்தபுரம் செல்ல கண்ணூர் ரயில் நிலையம் வந்திருந்த அமைச்சர் வீணா ஜார்ஜ், வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய காத்திருந்தார். அப்போது கருப்பு கொடிகளுடன் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டபடி அவரை அணுக முயன்றனர்.
இந்த சூழலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கை கலப்பில் அமைச்சர் வீணா ஜார்ஜ் கழுத்து மற்றும் கைகளில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அமைச்சரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் சம்பந்தப்பட்ட சிலரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
சம்பவத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார். இது மாணவர் போராட்டம் அல்ல; வன்முறை செயலாகும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
