கட்சி நிர்வாகி குறையை கேட்காதவர் தலைவராக இருக்க முடியாது; விஜய் மீது சரத்குமார் குற்றச்சாட்டு
தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து, பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சொந்த கட்சியின் நிர்வாகிகள் முன்வைக்கும் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காணாத ஒருவர், முழுமையான கட்சி தலைவராக இருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சியில் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தால், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜிதா ஆக்னஸ் என்ற பெண் தொண்டர் தற்கொலைக்கு முயன்று தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு கட்சி நிர்வாகியும் மிரட்டல் காரணமாக தற்கொலை முயற்சி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய சூழலில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக விஜய் மலேசியா சென்றது தவெக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தவெக தலைவர் விஜயை தற்போது ஒரு அரசியல்வாதியாகவே பார்க்க முடியவில்லை என கூறினார். தேர்தலை இன்னும் சந்திக்காத அந்த கட்சி, சமீபகாலமாகத்தான் அரசியல் களத்தில் செயல்பட தொடங்கியுள்ளதாகவும், கொள்கை மற்றும் கோட்பாடுகளை விளக்காமல் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும் விமர்சித்தார். விஜய் முழுமையான அரசியல் கட்சி தலைவராக இருப்பாரா அல்லது கட்சியை தொடர்ந்து நடத்துவாரா என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தவெக தலைவர் விஜயின் காரை மறித்து போராட்டம் நடத்திய பெண் நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை சுட்டிக்காட்டிய சரத்குமார், அந்த நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் விஜய் வாகனத்திலிருந்து இறங்கி இரண்டு வார்த்தைகள் பேசியிருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும் என்றார். சொந்த கட்சி நிர்வாகிகளின் குறைகளை கேட்டு தீர்வு காண்பவர்தான் உண்மையான நாயகனாகவும் கட்சி தலைவராகவும் இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இதனுடன், தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் காரணமாக குற்றச் சம்பவங்களும் பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருவதாக சரத்குமார் தெரிவித்தார். 100 நாள் வேலை திட்டத்தை சிதைப்பதற்கான எந்த திட்டமும் பாஜகவிடம் இல்லை என்றும், வேலை இல்லாத இடத்தில் வேலை செய்து இலவசமாக பணம் வழங்கக்கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் விளக்கினார். திமுக நல்ல திட்டங்களை வரவேற்காமல், தங்களுக்கு சாதகமான திட்டங்களில் மட்டும் தங்களது பெயரை சேர்த்துக் கொள்வதாகவும், பாதகமாக இருப்பதை குற்றச்சாட்டாக முன்வைப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
