கட்சிக் கொள்கையை ஒருபோதும் மீறவில்லை: காங்கிரஸ் எம்பி சசிதரூர் விளக்கம்
திருவனந்தபுரம்:
கட்சியின் கொள்கையை ஒருபோதும் மீறியதில்லை என்றும், தன்னுடைய நிலைப்பாடுகள் கட்சி ஒழுங்கை மீறியவை அல்ல என்றும் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோட்டில் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் உரையாற்றிய அவர், தன்னிடம் காணப்படும் வேறுபாடுகள் கட்சி கட்டுப்பாட்டை மீறியவை அல்ல; மாறாக, அவை கொள்கை அடிப்படையிலானவை என விளக்கினார். உலகளாவிய தளங்களில் இந்தியாவின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவது, கட்சி அரசியலை விட மேலானது என்றும் அவர் கூறினார்.
சிறந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றும், ஆனால் தேசிய நலன் தொடர்பான விஷயங்களில் இந்தியா மேலோங்க வேண்டும் என்பதே முக்கியம் என்றும் சசிதரூர் தெரிவித்தார்.
தனது சொந்த கட்சித் தலைமையுடன் விவாதிக்க வேண்டிய சில பிரச்னைகள் இருப்பதாகவும், அவை பொதுமன்றத்தில் அல்ல; கட்சிக்குள் விவாதிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் கூறினார். பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல உள்ளதாகவும், அப்போது கட்சித் தலைமையிடம் தனது கவலைகளை தெளிவாக முன்வைத்து, அவர்களின் கருத்தையும் பெறுவதற்கான முறையான உரையாடல் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 17 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக குறிப்பிட்ட சசிதரூர், தன்னிடம் தவறு எதுவும் இருந்தால், அதனை சரிசெய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். தன்னைப் பற்றிய சில செய்திகள் உண்மையாக இருக்கலாம்; சில பொய்யாகவும் இருக்கலாம் என்றும், கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் ஊடகங்கள் மூலம் அல்ல; கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியா வளர்ச்சியை நோக்கி கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், பாகிஸ்தானுடன் நீண்டகால மோதலில் நாட்டை இழுத்துச் செல்லக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். எந்தவொரு நடவடிக்கையும் பயங்கரவாத முகாம்களை குறிவைப்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூறினார். ஆப்பரேஷன் சிந்தூர் முழுவதையும், அதற்குப் பிறகும், தான் முழுமையாக ஆதரித்ததாகவும் சசிதரூர் தெரிவித்தார்.
