சென்னை: கடலூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, விவசாயி ராஜேந்திரன் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதில், அவர் பலத்த தீக்காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர தாக்குதல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற நிலை உருவாகி இருப்பதாக கூறினார். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு போலீஸ் மற்றும் அரசின் மீது எந்தப் பயமும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையை சீர்செய்ய முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
