கஞ்சா போதையில் ‘ரீல்ஸ்’ மோகத்தால் கொடூர தாக்குதல்; திருத்தணி சம்பவம் அதிர்ச்சி
திருத்தணி:
கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், ‘ரீல்ஸ்’ எடுக்கும் மோகத்தால், வடமாநில வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த வாலிபர் தற்போது உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் போதைக்களமாக மாறிவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு கஞ்சா பெட்டலங்கள் கடத்தப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி, திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில், ஒரு வாலிபர் வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற திருத்தணி போலீசார், அந்த வாலிபரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காயமடைந்தவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூரை சேர்ந்த சுராஜ் (30) என்பதும், கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதும் தெரிய வந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம், சுராஜை சிறுவர்கள் அரிவாளால் வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீடியோ பதிவுகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரித்ததில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த இருவர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவை சேர்ந்த இருவர் என, 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் இதில் ஈடுபட்டதும், அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று சிறுவர்கள் செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். பிளஸ் 2 படித்து வரும் ஒருவர், நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணையில் சிறுவர்கள் கூறியதாவது: நாங்கள் நான்கு பேரும் நண்பர்கள். கடந்த 27-ம் தேதி, திருவாலங்காடு – திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்தோம். எங்கள் பெட்டியில், வடமாநில வாலிபர் ஒருவர், பயணியர் ஏறி இறங்கும் பகுதியில் அமர்ந்து பயணம் செய்தார். அவரை அரிவாளால் மிரட்டுவது போல் ‘ரீல்ஸ்’ எடுக்க முயன்றோம். அதனை அவர் தடுத்தார்.
திருத்தணி ரயில் நிலையம் வந்ததும், அந்த வாலிபரை ரயிலில் இருந்து இறக்கி, அருகில் உள்ள ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அரிவாளால் வெட்டி, அந்த காட்சிகளை வீடியோ எடுத்து ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, புத்தகம் பிடிக்க வேண்டிய கையில் அரிவாள்கள் வைத்து சிறுவர்கள் வாலிபரை வெட்டியது மிகுந்த கண்டனத்துக்குரியது என்றும், சட்டம்–ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ‘புள்ளிங்கோ’ அச்சுறுத்தலை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், இளம் பருவத்தினர் போதையில் கொடிய ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுவது பயமுறுத்துவதாகவும், சிறார்களின் மன ஆரோக்கியம் சிதைவடைந்துள்ளது என்றும் கூறினார்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பதும், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதும், தி.மு.க., ஆட்சியின் தோல்வியை காட்டுவதாக தெரிவித்தார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி, பள்ளி செல்ல வேண்டிய வயதில் உள்ள சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி கொடூர செயலில் ஈடுபட்டதற்கு தி.மு.க., அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும், போதைப்பொருட்களை கட்டுப்படுத்த அரசு படுதோல்வி அடைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன், ‘ரீல்ஸ்’ எடுப்பதற்காக கொலை முயற்சிக்கு செல்லும் அளவுக்கு சிறுவர்கள் மாறியதற்கு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள்தான் காரணம் என்றும், தமிழகம் போதைக்களமாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
