ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.2,000; ஒரு தொகுதிக்கு ரூ.40 கோடி! வாக்காளர் கவர்ச்சி திட்டத்தை கண்டுபிடித்த உளவுத்துறை
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வெற்றி பெறும் நோக்கில் ஒரு அரசியல் கட்சி விரிவான வியூகத்தை வகுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், நான்கு முக்கிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருவதால், வாக்காளர்களை நேரடியாக அணுகும் நடவடிக்கைகளே வெற்றியை தீர்மானிக்கும் என அந்த கட்சி கருதுகிறது.
சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் வெளியான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், பெரும்பாலான தொகுதிகளில் 2.5 முதல் 3 லட்சம் வரை வாக்காளர்கள் இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, எந்தவித வேறுபாடும் இல்லாமல் தொகுதி முழுவதையும் உள்ளடக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் சராசரியாக 2 லட்சம் வாக்காளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ஒரு தொகுதிக்கு மொத்தமாக 40 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செலவில், 20 கோடி ரூபாயை கட்சி தலைமை நேரடியாக வேட்பாளர்களிடம் வழங்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், வேட்பாளர்கள் தங்களது பங்காக 10 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். மீதமுள்ள 10 கோடி ரூபாய் தொகையை, கட்சி தலைமைக்கு நெருக்கமான நபர்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பணத்தை எடுத்துச் சென்றால் கண்காணிப்பு குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் அபாயம் இருப்பதால், இந்த தொகைகள் முன்கூட்டியே அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரம் நெருங்கும் போது, பாதுகாப்பாக வைத்திருக்கும் பணத்தை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வழங்கி, அதை உரிய முறையில் பகிர்ந்து வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவ்வாறு செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் தேர்தல் முடிந்த பின் கட்சி தலைமைக்கு முழுமையான கணக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பணம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், தனிப்பட்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில், பணப்பட்டுவாடா தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் முழுவதையும் தொடர்ந்து கண்காணித்து வரும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள், அது குறித்த விரிவான தகவல்களை துறை மேலிடத்திற்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் சென்றடைந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மத்திய அரசு அந்தக் கட்சியின் செயல்பாடுகளை நெருக்கமாக கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த விவரங்கள் உள்துறை வழியாக தேர்தல் ஆணையத்திற்கும் பகிரப்பட்டு, சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை முறியடிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
