ஒரே வீட்டில் 211 ஓட்டுகள்; அமைச்சர் மூர்த்தி தொகுதி குறித்து கலெக்டரிடம் பா.ஜ., புகார்
மதுரை:
அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு சட்டசபை தொகுதியில், ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுகள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, அந்த தொகுதி முழுவதும் ஆய்வு நடத்த வேண்டும் என பா.ஜ., கட்சியினர் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, மதுரை கிழக்கு தொகுதி பொறுப்பாளரும், பா.ஜ., கூட்டுறவு பிரிவு தலைவருமான மகாசுசீந்திரன், இணை அமைப்பாளர் ராஜா, ஊடக பிரிவு மாநில பொறுப்பாளர் வேல்பாண்டியன் உள்ளிட்ட கட்சியினர் கூறுகையில், மதுரை கிழக்கு தொகுதி தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொகுதி என்றும், இங்கு 3.70 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர். முன்னதாக 328 ஓட்டுச் சாவடிகள் இருந்த நிலையில், தற்போது 395 ஓட்டுச் சாவடிகள் செயல்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதி சிறிய தொகுதியாக இருந்தாலும், அங்கு எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு இறந்தோர், தொகுதி மாறியோர், விடுபட்டோர் உள்ளிட்ட காரணங்களால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் நீக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுகளே நீக்கப்பட்டுள்ளதாகவும், முறையான ஆய்வு மேற்கொண்டால் 90 ஆயிரம் ஓட்டுகள் வரை நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், தாங்கள் ஆய்வு செய்த சில வார்டுகளில் ஒரே முகவரியில் நூற்றுக்கணக்கானோர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். மதுரை மாநகராட்சி 38வது வார்டு வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில், பாகம் எண் 337ல் 1 இ என்ற ஒரே வீட்டு எண்ணில் 115 பேரும், பாகம் எண் 338லிலும் அதே 1 இ வீட்டு எண்ணில் 96 பேரும் பதிவாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். இது எப்படி சாத்தியம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
வாக்காளர் பட்டியல் பணிகளில் பி.எல்.ஓ.,க்களாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றியதாகவும், அவர்களால் அதிகாரிகள் அல்லது ஆளும்கட்சியினரை எதிர்த்து செயல்பட முடியாது என்றும் பா.ஜ., கட்சியினர் தெரிவித்தனர். அமைச்சர் மூர்த்தி முதல்வர் போல செயல்படுவதாகவும், இதன் காரணமாக வாக்காளர் பட்டியலில் பல ஆயிரம் தகுதியற்றோர் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
எனவே, மதுரை கிழக்கு தொகுதி முழுவதும் ஆய்வு செய்து, தகுதியற்ற வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்ததாகவும், இதுகுறித்து விசாரிப்பதாக கலெக்டர் தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர்.
