புதுடில்லி: டில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சமூக பொறுப்பு நிதிக்கான தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் போது சமூக முன்னேற்றம் வேகமாகும். இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ள நிலையில், உள்கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள், டிஜிட்டல் இணைப்பு மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவை கோடிக்கணக்கான மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளன.
2047ல் வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை அடைய, கல்வி தரம், சுகாதார சேவை, தொழில்துறை வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் சமூக பொறுப்பு நிதி முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டார்.
வணிகத்தை எளிதாக்குதல், டிஜிட்டல் நிர்வாகம், ஜி.எஸ்.டி. போன்ற கொள்கை சீர்த்திருத்தங்கள் மூலம் அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை வலுப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ கொள்கை அமல்படுத்தப்பட்டால், அரசு நிர்வாகங்கள் வலுவான முடிவுகளை எடுக்கவும், நீண்டகால கொள்கைகளில் கவனம் செலுத்தவும் உதவும் என வலியுறுத்தினார்.
