ஒரு லட்சம் பங்குகள்; அதிக பெட்ரோல் பங்க் கொண்ட 03 வது நாடு இந்தியா..!
இந்தியாவில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பர் மாத இறுதிவரை, நாடு முழுவதும் மொத்தம் 1,00,266 பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு அதிக பெட்ரோல் பங்குகள் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா இடம்பிடித்துள்ளது.
இந்த பெட்ரோல் பங்குகளில் சுமார் 90 சதவீதம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தனியார் நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான பெட்ரோல் பங்குகளை வைத்திருப்பது ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் ஆதரவுடன் செயல்படும் நயாரா எரிசக்தி நிறுவனம் ஆகும்; இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 6,921 பங்குகள் உள்ளன. ரிலையன்ஸ்–பிபி இணை நிறுவனம் 2,115 பங்குகளையும், ஷெல் நிறுவனம் 346 பங்குகளையும் நடத்தி வருகிறது.
2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 50,451 பெட்ரோல் பங்குகள் மட்டுமே இருந்தன. அவற்றில் 2,967 பங்குகள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. அப்போது 5.9 சதவீதமாக இருந்த தனியார் பங்குகளின் விகிதம், தற்போது 9.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக எரிசக்தித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனைக்கு 2004 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டபோது, ஆரம்பத்தில் 27 பெட்ரோல் பங்குகள் மட்டுமே தொடங்கப்பட்டன. இந்தியாவில் எரிபொருள் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்தத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பு குறைந்த அளவிலேயே தொடர்கிறது. அரசு நிறுவனங்கள் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிப்பதும் இதற்குக் காரணமாக உள்ளது.
2024 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் 1,96,643 சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது; அங்கு கடந்த ஆண்டு 1,15,228 விற்பனை நிலையங்கள் இருந்தன. இந்த வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
