வாஷிங்டன்: மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்கா ராணுவத்தை குவித்து வரும் சூழலில், ஈரான் அர்த்தமுள்ள ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ளது. ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா ராணுவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலளித்த ஈரான், தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி நிச்சயம் என தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் சூழல் உருவாகக்கூடாது என அரபு நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஓமன் மத்தியஸ்தம் செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஊடகங்களில் வெளிவந்த தகவல்களுக்கு மத்தியில் டிரம்ப் கூறியதாவது: ஈரானுடன் அர்த்தமுள்ள ஒப்பந்தம் சாத்தியமில்லை என்பது கடந்த கால அனுபவங்களில் தெரிந்ததே. இருப்பினும், ஈரான் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
