சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள சுதந்திரமான சர்வதேச அறிவியல் குழுவில், சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏஐ காரணமாக உலகளவில் உருவாகும் சமூக மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்வதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், பல்வேறு நாடுகள் மற்றும் துறைகளை சேர்ந்த 40 நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலகளாவிய அறிவியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், ஏஐ நிர்வாகம் மற்றும் கொள்கை வடிவமைப்பில் அறிவியல் ஆதாரங்களை கொண்டு வரவும் இந்த குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் ரவீந்திரன், சென்னை ஐஐடியில் உள்ள டேட்டா அறிவியல் மற்றும் ஏஐக்கான வாத்வானி பள்ளியின் துறைத் தலைவராக உள்ளார். மேலும், சென்னை ஐஐடியில் ஏஐ ஆராய்ச்சிக்கான CeRAI ஆய்வகத்தை தோற்றுவித்தவரும் இவர் தான். ஏஐ துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர் என கல்வி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்நியமனம், செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் சர்வதேச முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக சென்னை ஐஐடி பெருமிதம் தெரிவித்துள்ளது.
