சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய சர்வதேச டி20 தரவரிசை பட்டியல் துபாயில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டர் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார், முதல் மூன்று டி20 போட்டிகளில் 171 ரன்கள் குவித்ததன் மூலம் 717 புள்ளிகளுடன் 12வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த தொடரில் அவர் 32, 82* மற்றும் 57* ரன்கள் எடுத்திருந்தார்.
பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 929 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் இரண்டு அரைசதங்களை பதிவு செய்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான திலக் வர்மா 781 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 787 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, 17வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா 248 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஜா 289 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
