புதுடில்லி: இந்திய ஏ.ஐ. இம்பாக்ட் சம்மிட் 2026ல் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு புதிய பரிமாணத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். உலகம் முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில், இந்தியா அதனை அதிவேகமாக பயன்படுத்தி வருவதால் உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்குகின்றன என்றார்.
இந்த தொழில்நுட்ப வளர்ச்சி, இந்தியாவை உலகளாவிய அறிவுத்திறன் மையமாக மாற்ற உதவும் என்றும், ‘வளர்ந்த பாரதம் 2047’ நோக்கை அடைய முக்கிய பங்காற்றும் என்றும் பிரதான் நம்பிக்கை வெளியிட்டார்.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு அமர்வில், பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு செயலர் சஞ்சய் குமார், உயர் கல்வி செயலர் வினீத் ஜோஷி, சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
கல்வியில் ஏ.ஐ. பயன்பாடு குறித்து பேசிய ஜோஹோ நிறுவன இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, கிராமப்புற மாணவர்களுக்கு ஏ.ஐ. மிகப்பெரிய கற்றல் ஊக்கியாக அமையும் என்றார். ஆசிரியர்களுக்கு துணை புரிவதற்கும், மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் ஏ.ஐ. மாதிரிகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, டிஜிட்டல் பொது பரிவர்த்தனை அமைப்பில் இந்தியா உலகுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை சுட்டிக்காட்டி, கல்வித்துறையிலும் முழுமையான ஏ.ஐ. வரைமுறையை உருவாக்க இந்தியா முன்னேறி வருவதாக தெரிவித்தார். பல மொழிகளில் தகவல் வழங்கும் இந்தியாவின் திறன், தாய்மொழி கற்றலை வலுப்படுத்தும் சக்தியாக அமையும் என்றார். 2035க்குள் மொத்த சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதிலும் ஏ.ஐ. முக்கிய பங்காற்றும் என குறிப்பிட்டார்.
இதேவேளை, ஏ.ஐ. தொழில்நுட்பம் பாரம்பரிய துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. டாடா குழுமத்தின் ‘டாடா ஏ.ஐ. சகி’ திட்டம் குறித்து அதன் வழிகாட்டி முத்துலட்சுமி விளக்கமளித்தார். கைவினை கலைஞர்களுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஏ.ஐ. உதவியுடன் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன என்றார்.
‘காஞ்சிபுரம் சில்க் பார்க்’ எனும் தனிப்பட்ட மென்பொருள் தீர்வு மூலம், சேலை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வடிவமைப்பு, நிறம் உள்ளிட்ட தகவல்களை உள்ளீடாக பெற்று, தறி நெசவாளர்களுக்கு எல்.இ.டி. வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பிழைகள் குறைய, நேரம் மற்றும் மூலப்பொருள் இழப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
ஏ.ஐ. உதவியுடன் உருவாக்கப்படும் நுணுக்கமான வடிவமைப்புகள் அதிக விலைக்கு விற்பனையாகின்றன. இது கைவினைஞர்களின் வருமானத்தை உயர்த்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இம்மர்சன் திட்டம் வாயிலாக 2,000 கிராமப்புற மகளிருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
