புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக உருவெடுத்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டில்லி பாரத் மண்டபத்தில் ஐந்து நாட்கள் நடைபெற்ற சர்வதேச ஏஐ உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நிறைவடைந்தது. மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாநாட்டின் நிறைவில், மனிதநேய அடிப்படையிலான ஏஐ கொள்கைகளை மையமாக கொண்ட பிரகடனத்தில் 86 நாடுகள் மற்றும் இரண்டு சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டன.
இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ஏஐ தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதையே இந்தியா வலியுறுத்தியதாக தெரிவித்தார். சமூகத்தின் கடைசி மனிதன் வரை ஏஐ தொழில்நுட்பத்தின் பலன்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் கொள்கைகள் வகுக்கப்பட்டதாக கூறினார்.
பொருளாதார வளர்ச்சியுடன் சமூக நலன், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உலக நாடுகள் ஒற்றுமையாக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மாநாட்டின் மூலம் உள்கட்டமைப்பு மற்றும் டீப் டெக் ஆராய்ச்சி துறைகளில் பெருமளவு முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும், ஏஐ கண்காட்சியில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்று, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளை நேரடியாக அறிந்துகொண்டனர்.
மொத்தத்தில், ஏஐ துறையில் இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை இந்த மாநாட்டில் தெளிவாக பிரதிபலித்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
