டில்லி பாரத் மண்டபத்தில் ஐந்து நாட்களாக நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார். புதிய ஏஐ யுகத்தில் இந்தியாவின் பங்களிப்பு மீது உலக நாடுகள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் வாயிலாக ஏஐ உள்கட்டமைப்பிற்காக ரூ.21 லட்சம் கோடி மற்றும் ஆழமான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்காக 20 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். இந்தியா தனது ஏஐ பயணத்தின் அடுத்த கட்டமான ‘AI மிஷன் 2.0’ நோக்கி நகர்ந்து வருவதாகவும், இது மேம்பட்ட இறையாண்மை மாதிரிகள் மற்றும் பாதுகாப்பான உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தும் என்றும் விளக்கினார்.
ஏஐ தொழில்நுட்பம் சிலரின் கைகளில் மட்டும் இருக்கக் கூடாது; மக்களுக்காக, மக்களால், மக்களின் தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் பார்வை என அமைச்சர் வலியுறுத்தினார். ஏஐ தொழில்நுட்பம் வேலைகளை பறிக்காது; மாறாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார். இதற்காக 500 பல்கலைக்கழகங்களில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
டீப்பேக் போன்ற தவறான பயன்பாடுகளை தடுக்கும் பொருட்டு தொழில்நுட்ப ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த ஐந்து நாள் மாநாட்டை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டதாகவும், இது இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், 86 நாடுகள் மற்றும் இரண்டு சர்வதேச அமைப்புகள் இணைந்து ஏஐ உச்சி மாநாட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
