ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டித்துள்ளார்.
புதுடில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தையும் பிரதமர் மோடியின் தலைமையையும் பாராட்டியதாக குறிப்பிட்டார். இதுபோன்ற தருணம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கை அவமானகரமானது என கூறிய ரிஜிஜு, “அவர்கள் செய்தது தவறு மட்டுமல்ல; அது ஒரு குற்றம்” என விமர்சித்தார். நாட்டின் மரியாதையை பாதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் நலனில் அக்கறை இருந்தால் காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து மன்னிப்பு கேட்கும் என எதிர்பார்த்தோம் என்றும், ஆனால் மன்னிப்பு கேட்பதற்கு பதில் அந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவது ஏற்க முடியாதது என்றும் அவர் கூறினார்.
கோபத்தின் வெளிப்பாடு என்ற காரணத்தை முன்வைப்பது பொருந்தாது என வலியுறுத்திய அவர், உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவை அவமானப்படுத்த கோபத்தை கருவியாக பயன்படுத்துவது மிகவும் வெட்கக்கேடானது என தெரிவித்தார்.
