மீரட்: டில்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டை அரசியல் தளமாக மாற்றியதாக காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் மெட்ரோ ரயில் மற்றும் நமோ பாரத் ரயில் சேவைகளை துவக்கிவைத்து, பல்வேறு நலத்திட்டங்களை அர்ப்பணித்த பின் அவர் உரையாற்றினார். அப்போது, டில்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் நடத்திய போராட்டம் குறித்து குறிப்பிட்டார்.
பிரதமர் கூறியதாவது: நாட்டின் பழமையான அரசியல் கட்சி கொள்கை ரீதியாக திவாலாகி உள்ளதற்கான எடுத்துக்காட்டாக, ஏஐ மாநாட்டில் நடந்த சம்பவங்கள் அமைந்துள்ளன. சொந்த நாட்டின் வெற்றியை ஏற்க முடியாமல் சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாடு இந்தியாவில் நடைபெற்றது.
ஆனால், அந்த தேசிய நிகழ்ச்சியை காங்கிரஸ் தனது அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தியது. இது எந்த ஒரு கட்சியின் நிகழ்ச்சி அல்ல; தேசிய நிகழ்ச்சி. நாட்டின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளை இழிவுபடுத்தும் அரசியல் நாட்டு மக்களால் ஏற்கப்படாது.
காங்கிரஸ் தலைவர்கள் என்னை விமர்சிப்பது அவர்களது உரிமை. ஆனால், தேசிய நிகழ்ச்சிகளை அவமதிக்கும் செயல்கள் தவறானவை. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
