புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள இந்தியா வெளிப்படுத்தும் மகத்தான நம்பிக்கையை பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் பாராட்டினார்.
டில்லியில் நடைபெற்ற ‘ஏஐ காலத்தில் நிர்வாகம்: இறையாண்மை, தாக்கம் மற்றும் பிராந்தியம்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் ஏஐ குறித்து மாறுபட்ட பார்வைகள் நிலவுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில், ஏஐயை நோக்கிய உறுதியும் நம்பிக்கையும் தென்படுகின்றன. ஆனால், பல மேற்கத்திய நாடுகளில் இன்னும் குழப்ப நிலை காணப்படுகிறது.
இந்த இடைவெளியை நிரப்ப தொழில்நுட்ப வளர்ச்சி மட்டும் போதாது. மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு தெளிவான கொள்கை முடிவுகள் அவசியம். நம்பிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வது உலக தலைவர்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து டில்லியில் நடைபெறும் ஏஐ மாநாட்டில் உரையாற்றிய சுனக், தொழிலாளர் சந்தையில் ஏஐ முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார். சில வேலைகள் மறைந்து போகலாம்; சில வேலைகள் புதிய வடிவம் பெறலாம்.
புதுமையை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த மாற்றத்தை மக்கள் நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் ஏற்றுக்கொள்ள அரசு ஆதரவு வழங்க வேண்டும். ஏஐ மாற்றத்தை திறம்பட சமாளிக்க கொள்கை மாற்றங்கள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
