புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இளைஞர்களின் திறமைகளை பன்மடங்கு உயர்த்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெற்று வரும் ஐந்து நாள் ஏஐ உச்சி மாநாட்டை முன்னிட்டு, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
ஏஐ காரணமாக வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் இளைஞர்களிடம் நிலவுவது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், புதுமை மற்றும் தொழில்நுட்ப புரட்சிகள் வேலைகளை அழிக்கும் என்ற கவலை பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக குறிப்பிட்டார். ஆனால் வரலாறு காட்டுவது, புதுமைகள் தோன்றும் போதெல்லாம் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன என்பதையே என்றார்.
“ஏஐ தொழில்நுட்பம் உங்கள் திறமையை பன்மடங்கு பெருக்கும். மக்கள் திறனை மேம்படுத்துவதில் அரசு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. எந்த சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதே பயத்திற்கு மாற்று,” என அவர் தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிகழும் மாற்றங்களுக்கு இந்தியா ஏற்கனவே தயாராக இருப்பதாகவும், டிஜிட்டல் மாற்றம் சில வேலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
