டில்லி: இந்தியா ஏஐ இம்பாக்ட் கண்காட்சியில், தனியார் பல்கலைக்கழகம் காட்சிப்படுத்திய ரோபோ நாய் தொடர்பாக சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, அந்த பல்கலையின் அரங்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள், கண்காட்சியில் ரோபோ நாய் ஒன்றை அறிமுகப்படுத்தினர். இதுகுறித்து அவர்கள், “இந்த ரோபோ எங்கள் வளாகத்தில் இயங்குகிறது. மனிதர்கள் அணுக முடியாத இடங்களில் புகைப்படம் எடுக்கக்கூடிய திறன் கொண்டது,” என தெரிவித்தனர்.
இந்த காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், ரோபோவின் செயல்பாடுகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன. பின்னர், பல்வேறு ஊடகங்களில் வெளியான தகவல்களின் மூலம், அந்த ரோபோ சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதும், பல்கலைக்கழகம் அதை வாங்கியிருந்தது என்பதும் தெரிய வந்தது.
இதனால், ரோபோவை சொந்த உருவாக்கம் போல காட்சிப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்த பல்கலைக்கழகம், “யுனிட்ரீ நிறுவனத்தின் ரோபோ டாக் சமீபத்தில் வாங்கப்பட்டது. இது கற்பித்தல் மற்றும் ஆய்வுக்காக பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் இதன் மூலம் தொழில்நுட்ப அறிவை விரிவாக்கி வருகின்றனர்,” என தெரிவித்துள்ளது.
