புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து கட்டமைக்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்று வரும் சர்வதேச ஏஐ மாநாட்டின் நிகழ்வில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், ஐநா பொதுச்செயலாளர் மற்றும் முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் உரையாற்றிய மேக்ரான், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை சிறப்பாக குறிப்பிட்டார்.
“ஒரு தசாப்தத்திற்கு முன்பு, இந்தியா கோடிக்கணக்கான மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்தில் இணைக்க முடியாது என்ற கருத்து நிலவியது. ஆனால், அந்த மதிப்பீட்டை இந்தியா முறியடித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் சுகாதார கட்டமைப்பில் இந்தியா உருவாக்கிய முன்னேற்றம் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது,” என்றார்.
மேலும், ஏஐ தொழில்நுட்பத்தை பெரிய நிறுவனங்கள் மட்டுமே கையாளும் என்ற பார்வையை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். புதுமை, தொழில்நுட்பம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவை ஒன்றிணையும் போது மட்டுமே ஏஐயின் முழு பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தியா – பிரான்ஸ் கூட்டாண்மை, பொறுப்பான மற்றும் மனித மைய அணுகுமுறையுடன் ஏஐ வளர்ச்சியை முன்னெடுக்கும் என மேக்ரான் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை பாதுகாக்கும் டிஜிட்டல் கொள்கைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
