புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது. ஆனால் எம்பிக்கள் அமளி காரணமாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதால், லோக்சபா சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 28ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் ராணுவ தளபதி நராவனே எழுதிய புத்தகம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த முயன்றன.
கடும் அமளி
இதற்கு பதிலளித்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, “இன்னும் பிரசுரிக்கப்படாத ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டி சபையில் விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேச அனுமதிக்காமல் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதனைத் தொடர்ந்து சில எதிர்க்கட்சித் எம்பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று காகிதங்களை கிழித்து எறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எட்டு எதிர்க்கட்சித் எம்.பி.க்களை கூட்டத்தொடர் முழுவதும் சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபா சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அதற்காக 118 எதிர்க்கட்சித் எம்.பி.க்கள் கையெழுத்திட்டு லோக்சபா செயலரிடம் நோட்டீஸ் அளித்தனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது
