வாஷிங்டன்: எப்ஸ்டீன் தொடர்பு காரணமாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து பில் கேட்ஸ் தனது தொண்டு நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு டவுன்ஹால் கூட்டத்தில் பேசியதாக கூறப்படும் கேட்ஸ், எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்பு ஒரு பெரிய தவறு என தெரிவித்துள்ளார். இது தனது நற்பெயருக்கும், தொண்டு நிறுவனத்தின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில், எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்றும் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீன் வேண்டுகோளின் பேரில் சில சந்திப்புகளுக்குப் பிறகு புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும், அதில் தவறான நோக்கம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியதாக தகவல் தெரிவிக்கிறது. கடந்த கால தொடர்பால் ஏற்பட்ட களங்கத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ரஷ்யாவைச் சேர்ந்த சில பெண்களுடன் இருந்த தொடர்பை அவர் ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் தொழில் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட அறிமுகம் காரணமாக அந்த தொடர்பு உருவானது என்றும், அது எப்ஸ்டீன் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
ஜெப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவைச் சேர்ந்த நிதியாளர்; பாலியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு 2008ல் சிறை தண்டனை அனுபவித்தார். 2019ல் மீண்டும் கைது செய்யப்பட்ட அவர், நியூயார்க் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் பெயர்கள் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டன. அதில் பில் கேட்ஸ் குறித்த குறிப்புகள் இடம்பெற்றதாக முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த குற்றச்சாட்டுகளை கேட்ஸ் ஏற்கனவே மறுத்திருந்தார்.
